வடக்கும் தெற்கும்!

            உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் ஒரு சிறு நிகழ்வுக்கு இங்கு முகநூலில் பல கட்சிகளாகப் பிரிந்து சண்டையிட்டுக் கொள்ளும் காட்சிகளைப் பார்க்கும் போது அவர்களைப் பரிதாபத்துடன் புறந்தள்ளிவிட்டு என்னுடைய வேளையில் நான் கவனம் செலுத்தத் துவங்கிவிடுவதுண்டு.

ஆனால் சில சம்பவங்களின் நேரடித் தாக்குதலால் துவண்டு போய்  பழி பாவத்திற்கு அஞ்சி அதிலிருந்து விடுபடுவதற்கு இம்மாதிரி எதையாவது எழுதித் தொலைக்க வேண்டியிருக்கிறது. இப்படி எழுதுவது எந்த மட்டில் மாற்றத்தைக் கொண்டு வரும், எத்தனை பேரை சிந்திக்க வைக்கும் என்பதை விட  எவ்வளவு தூரம் நம் மன உளைச்சலில் இருந்து விடு படுகிறோம் என்பதை தான் பார்க்க வேண்டியிருக்கிறது. 

"மெட்ராஸ் கபே" திரைப்படத்தை இங்கு உள்ள (சூரத்) சில வட இந்திய நண்பர்களுடன் நேற்று பார்க்க நேரிட்டது!

வடஇந்தியர்கள் சிலருக்கு ஈழப் படுகொலைகள் பற்றி எதுவுமே தெரியாது. சிலருக்கு LTTE தலைவர் பிரபாகரன் பெயரைக் கேள்விப் பட்டதன்றி வேறெதுவும் தெரியவில்லை! இவர்களுக்கு பிரதான எதிரி பாகிஸ்தான் தான். காஷ்மீர் தான் இந்தியாவின் தலையாய பிரச்சனை. கடந்த வாரம் இந்தியா டுடே கருத்துக் கணிப்பிற்காக என்னிடம் கேள்விகள் கேட்கப் பட்டபோது கூட 'காஷ்மீர் பிரச்சனையை மிக லாவகமாக கையாளும் கட்சி காங்கிரசா? பி.ஜே.பி யா?' என்று தான் கேட்டார்கள். குஜராத்தை விட உற்பத்தியிலும், வருமானத்திலும் இன்னும் பல விஷயங்களில் தமிழ் நாடு முன்னேறியிருக்கிறது என்பதை இவர்கள் நம்பத் தயாராக இல்லை. இவர்களுக்கு தமிழகமும் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மணிப்பூர், மேகலாயா போன்றது தான். இதில் இவர்களுக்கு, யானைவைத்து நெல்லுடைத்த தஞ்சை விவசாயிகள் காவேரிப் பிரச்சனையில் எலிக்கறி தின்றது தெரியவா போகிறது?

சரி நாம் விஷயத்துக்கு வருவோம்!

இராமேஸ்வரத்தில் இருந்து வெறும் 100 மைல் தொலைவில் வாழும் இலங்கைத் தமிழர்களை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும் என்று இங்கு ஈழம் பற்றி தெரிந்த ஒருசிலருகும் எண்ணுவது உண்டு. ஈழம் என்பது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையாகவே இவர்கள் நம்புகிறார்கள்.

குஜராத்தின் ஜூனாகத்தை இந்தியாவுடன் இணைத்துக் கொண்டு, இன்றளவும் காஷ்மீரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்தியாவின் குடிமகன்களான வட இந்தியர்களுக்கு ஈழம் மட்டும் அயல் நாட்டுப் பிறட்சனையாத் தெரிவது மிகவும் ஆச்சரியாமாகத் தெரிகிறதா? அதற்க்குக் காரணம் யார் என்று கேட்டால் இரண்டு விஷயங்களை பற்றி இங்கு விவாதிக்க வேண்டி வரும்.

முதலாவதாக, ஏற்கனவே வடஇந்தியர்களால் மொழியாலும், நிறத்தாலும் நிராகரிக்கப்பட்ட நாம், இராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பின் அடியோடு நாம் வேற்று மனிதர்கள் என்ற எண்ணத்தை வட இந்திய ஊடகங்கள் அவர்கள் மனதில் விதைக்க ஆரம்பித்தன. தமிழர்களை நாகரிகம் அற்ற முரடர்களாகவும், ஊழல் பேர்வழிகளாகவும், படிப்பறிவற்ற ஏழை மாநிலத்தவர்களாகவும் காட்டுவதில் வடஇந்திய ஊடகங்களுக்கும் இந்தித் திரைத் துறையினருக்கும் நிலவும் கடும் போட்டியில் தோற்றுப் போவது என்னவோ நாம் தான்.

இரண்டாவது???????? 

இராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பின் இன்று வரை (கடந்த 20 ஆண்டுகளாக) நாம் அரசியல் ரீதியாக நம் முகமாக பாராளுமன்றத்திற்கு யாரை அனுப்பி வைத்தோம் என்ற கேள்விக்கான பதிலில் வட இந்தியர்கள் தமிழர்களிடம் இன்னும் பகைமை பாராட்டுவதற்கான காரணமும் அடங்கியிருக்கிறது!

2004 ஆம் ஆண்டு இறுதிகளில் மற்ற எல்லா மாநிலங்களை விட அதிகமாக 6 கேபினட் அமைச்சர்களையும் 11 இணை அமைச்சர்களையும் இந்திய அளவில் பெற்றிருந்த நாம் நம் தேவைகளை முன்னிறுத்தி கொண்டிருந்த தமிழ் நாட்டை மற்ற மாநிலங்கள் கொஞ்சம் பொறாமையுடன் தான் பார்க்க வேண்டியிருந்தது.

நம்மவர்கள் கேபினட் அமைச்சராக பெரும்பான்மையாக அமர்ந்துவிட்டதாக சிலர் இங்கு கூப்பாடு போட்டார்கள். டெல்லியின் செங்கோட்டையைப் பெயர்த்து சென்னையில் வைக்கப் போவதாக ஆர்ப்பரித்தார்கள்.

ஆனால் நடந்தது என்ன என்பது எல்லாருக்கும் தெரிந்ததே!ஊழல் விவகாரங்களில் சிக்கிக் கொண்டு காங்கிரசுக்கும், CBI க்கும் பயந்து  திருடனுக்கு தேள் கொட்டிய கதையாய் அடக்கி வாசித்தனர். 

மெட்ராஸ் கபே போல் இன்னும் எத்தனை படங்கள் வந்தாலும் இவர்கள் அதைக் கண்டுகொள்ளப் போவதில்லை. ஏன்? இவர்கள் குடுமி காங்கிரசிடம் அல்லவா இருக்கிறது? இன்னும் இருக்கவே இருக்கிறது அ. தி.மு.க. எந்தப் பிரச்சனைக்கும் அ. தி.மு.க. வின் மேல் பழியைப் போடும் தி.மு.க வினரைப் பார்க்கும் போது சூடு சொரணையற்ற இவர்கள் மானமுள்ள தமிழனாக இருந்தால் தி.மு.க விலா இருப்பார்கள் என்று எண்ணிக்கொள்ளத் தான் தோன்றுகிறது.

இந்தியாவின் மிகப் பெரும் ஊழலாக சொல்லப்படும் 2G விவகாரத்தில் தண்டனை பெற்றதின் மூலம் ஒரு அருவருப்பான அரசியல் வாதிகளாக தி.மு.க வினர் வட இந்தியர்களுக்கு தெரிகிறார்கள். இவர்கள் இனி ஈழத்திர்க்காக எங்கு சென்று போராடினாலும் நமக்கு அவமானமே மிஞ்சும்.

TIMES NOW, NDTV, CNN IBN போன்ற வடஇந்திய ஆங்கில ஊடகங்களில் காங்கிரஸ் காரர்களையும் சுப்பிரமணிய சுவாமிகளையும் நம் சார்பாக பேச வைத்து கேவலப்பட்டதும் நம் தலையில் நாமே மண்ணை வாரி இறைத்துக் கொண்டது தான் மிச்சம். 

ஆக மொத்தம் அவர்கள் உயிருடன் கொல்லப் பட்டபோதும் நம்மால் உதவ முடியவில்லை. இப்போது மிஞ்சியிருப்போர்க்கும் மத்தியில் உள்ள நம்மவர்களால் கடுகளவும் பிரயோஜனமே இல்லை. 

நம் முதல்வர் என்றதற்காக எதிர்க்கட்சியே என்றாலும் எம்.ஜி.ஆருக்காக பரிந்து பேசியவரும், இந்தியாவின் மிகச்சிறந்த பார்லிமெண்டேரியன்களில் ஒருவராக அறியப்படும் வைகோவை கடந்த 20 வருடங்களாக தமிழகத்திற்கு உள்ளே ஒழித்து வைத்துக் கொண்டதன் பலாபலனை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குப் பின் நாம் புரிந்து கொள்ளப் போகிறோம்?

இந்தக் கட்டுரையின் ஆதிமூல காரணமான 'மெட்ராஸ் கபே' திரைப்பட மாகட்டும், ஆசிட் வீச்சில் பலியான விநோதிநியைப் பற்றியதாகட்டும், முல்லைப் பெரியாறு, காவேரி, கூடங்குளம் அணு உலை என அனைத்து தேசிய அளவிலான பிரச்சனைகளுக்கும் உங்கள் குரல் நாடாளும் மன்றத்தில் ஒழிப்பதற்கு நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று தான். 

மாற்றத்திற்கான காலம் நெருங்கி வருவதை உணர்ந்திருங்கள்!!!

உங்கள் ஆள்க்காட்டி விரலின் வலிமையை இவர்களுக்கு உணர்த்துவதிலிருந்து  தவறாமல் இருக்க உறுதியோடிருங்கள்!!!

வரும் காலம் நமதாகட்டும்!

.......................................................................

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Copyright © 2011 Mixx Blogger Template - Blogger Templates by BloggerReflex

Sponsored by: Trucks | SUV | Cheap Concert Tickets