சர்தார் சரோவர் அணை.... (அனுபவம்)

· 7 கருத்துகள்

         நீண்ட நாட்களுக்குப் பின் நான் இப்போது தான் கொஞ்சம் வெளியே சுற்ற ஆரம்பித்திருக்கிறேன். அதில் நான் முதலில் சென்றது சர்தார் சரோவர் அணை. சூரத்திலிருந்து 180 கி.மீ. தொலைவில் உள்ள அணையை அடைய 4 மணி நேரம் ஆகும். அதனால் காலை 7 மணிக்கே  புறப்பட்டோம். 8 பேர் கொண்ட குழுவில் என்னைத் தவிர மற்ற 7 பேரும் குஜராத்தி. இதில் ஒருவர் மோடி இனத்தவர், மற்றவர்கள் படேல் வம்சாவளியினர்.
        நான்கு நான்கு பேராக தேசிய நெடுஞ்சாலை எண் 8 இன் வழியாகப் பிரயாணத்தை ஆரம்பித்தோம். இது மும்பை மற்றும் டெல்லியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை.  வழி நெடுகிலும் தொழிற்சாலைகள். Tyre, chemical, steel industryகள் அதிகம். . இந்தியாவின் மிக முக்கியமானதும் எந்நேரமும் நெரிசல் மிக்கதுமான சாலை இதுதான் என்று உடன் வந்தவர் ( மோடி) சொல்லிக் கொண்டே வந்தார்.  

தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து சர்தார் சரோவர் அணைக்குச் செல்லும் பாதையில் நுழைந்தோம். இப்போது தொழிற்சாலைகள் மறைந்து எங்கும் பசுமை. இடையிடையே கிராமங்கள். 
      வழியில் ராஜ்பிப்லா என்றொரு கிராமம். அங்கு தான் மேலே உள்ள கொடுமையை போட்டோ பிடித்தேன்! சுமார் 40 பள்ளிக் கூட மாணவர்கள் ஒரு பேருந்தின் கூரை மீது உட்கார்ந்து கொண்டு பயணித்தார்கள். இதையெல்லாம் உங்க நரேந்திர மோடி கண்டுகறதில்லையா என்று கேட்டேன்? 
அவர் ஆரம்பித்தார். குஜராத்தில்  ஒரு 20 வருடங்கள் முன்பு வரை படேல் வம்சத்தினர் ஜமீந்தாரராகவும், பண்ணையக்காரர்களாகவும் இருந்தார்களாம். அவர்கள் வைத்தது தான் சட்டம். நிலங்கள் எல்லாமே அவர்கள் வசம் தான் இருந்ததாம். பின் கொஞ்ச கொஞ்சமாக மாறி மோடி ஆட்சியில் முற்றிலும் அது ஒழிக்கப் பட்டு நிலங்கள் பிரித்தளிக்கப்பட்டு விட்டனவாம். ஆனால் இன்னும் படேல் வம்சத்தினரின் செல்வாக்கு இங்கு குறைய வில்லை. 

  அவர்கள்     கிராமவாசிகளைக்   கட்டுப் படுத்தி  இன்னமும் அரசுக்கு இடையூறு செய்து கொண்டே இருக்கிறார்கள். அந்த வகை தான் மேற்ச்சொன்ன போட்டோவிற்க்கான விளக்கம். 

      இங்கு பாமர மக்கள் அதிகம் என்று அவர் மேலுமொரு கதை சொன்னார். முதலில் என்னிடம் "அஸ்வத்தாமன் யார் என்று தெரியுமா?" என்று கேட்டார். நான் "துரோணரின் மகன் " என்றேன். இன்னும் அஸ்வத்தாமன் போரில் பங்கேற்றதும் பின் இறந்ததைப் பற்றியும் சொன்னேன். எனக்கும் மகாபாரதம் தெரிந்தது பற்றி அவர் ஆச்சரியப்பட்டார். இந்தியர்கள் அனைவரும் கட்டாயமாக மகாபாரதம் படிக்க வேண்டும் என்றார். இப்போதுள்ள இளைஞர்கள் யாரும் மகாபாரதம் படிப்பதில்லை, நீ தமிழகத்தில் இருந்து வந்திருந்தாலும் உனக்கு தெரிகிறதே என்றார். நாங்களும் 1993க்குப் பிறகு மகாபாரதம் மட்டுமல்ல எந்த ஒரு புத்தகத்தையும் படிப்பதில்லை என்றேன். 'ஏன்?' என்றார். அதுக்கப்புறம் நாங்க SUN TV பார்த்து எங்க அறிவை வளத்துக்கிட்டோம் என்று சொல்லி வைத்தேன். 
      அஸ்வத்தாமன் போரில் தலை வெட்டப் பட்டு இறந்ததும் அவனது தலையில்லாத முண்டம் இங்குள்ள மலைப் பிரதேசங்களில் சுற்ற ஆரம்பித்து விட்டதாம். நள்ளிரவு நேரங்களில் இங்குள்ள கிராம மக்களிடம் வெட்டப் பட்ட இடங்களில் நெய் ஊற்றுமாறு கேட்டு வந்து முண்டமாக நிற்கும் என்று இன்னமும் இந்த மலைசாதியினர் நம்புகிறார்கள். இதற்காக தலையற்ற முண்டமாக ஒரு சிலை செய்து இன்னமும் அதில் நெய் ஊற்றி வருகிறார்களாம். நான் பயணித்த பாதைகளில் அப்படியொரு சிலை தென்படவில்லை. 
        அடுத்ததாக இங்கு ஒரு குட்டி அரண்மனை ஒன்று மலைமேட்டில் இருந்தது. இதை ஆண்ட ராஜா தன் மகனுக்காக கட்டிய அரண்மனையாம். இன்னமும் அந்த ராஜபரம்பரையினர் என்று சொல்லிக் கொண்டு ஒரு குடும்பம் அங்கு வசித்து வருகிறது. அரண்மனை இப்போது அவர்கள் வசம் தான் உள்ளது. இன்னமும் அரண்மனை அரசுடைமை ஆக்கப்படவில்லை.
       சிலையைப் பார்த்ததில் (படம்) ராஜா போரில் காயம் பட்டு இறந்தவர் என்று தெரிகிறது. (முன் இரண்டு கால்களையும் தூக்கிய நிலையில் குதிரை இருந்தால் அரசர் போரிலேயே வீர மரணம் அடைந்ததாகப் பொருள்.)
     
      இதிலிருந்து ஒரு அரைமணி நேரப் பயணத்தில் சர்தார் சரோவர் அணையை அடைந்து விட்டோம். 
     இந்தியாவில் பெரும்பாலும் எல்லா நதிகளும் வங்காள விரிகுடா கடலிலேயே கலக்கின்றன. நர்மதையும், தபதியும் மட்டுமே அரபிக் கடலில் கலக்கின்றன. சர்தார் சரோவர் அணை நர்மதை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மிகப்பெரிய அணை. இந்தியாவின் 5 ஆவது மிகப்பெரிய அணையும் இதுதான். 
       2500MW அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர் மின் நிலையங்கள் இந்த அணையைச் சார்ந்து அமைக்கப்பட்டுள்ளன. (தமிழகத்தின் மின் பற்றாக்குறையைப் போக்க இந்த மின்சாரம் போதுமானது.) மூன்று மாவட்டங்களின் மொத்த விவசாயமும் இந்த அணையையே நம்பி அமைந்துள்ளது. இருந்தாலும் இந்த அணையைச் சுற்றியுள்ள பழங்குடி மக்கள் இதைக் கட்டுவதை அருந்ததி ராய், மேதா பட்கர் போன்ற சமூக ஆர்வலர்களின் துணையோடு சுமார் 20 ஆண்டுகளாக எதிர்த்து போராடி வருகிறார்கள். இந்தியாவின் மிகுந்த சர்ச்சைக்குள்ளான இந்த அணை குஜராத், மத்திய பிரதேஷ் மற்றும் மகாராஷ்டிராவிற்கு மத்தியமாக அமைந்துள்ளது. ஆனால் இதன் மொத்தப் பயன்பாடும் குஜராத்திர்க்குத் தான். 
நாங்கள் சென்ற போது பகலில் கடும் வெய்யில், மாலையில் நல்ல மழை. மற்ற எல்லா அணைகளைப் போலவே இதுவும் மிகச் சிறந்த சுற்றுலாத்தலமாகவே எனக்கு தோன்றியது. மாலை மணிக்கு வீடு திரும்ப ஆரம்பித்து விட்டோம். 
     எப்படிப் பட்ட ஒரு திட்டமாக இருந்தாலும் அதற்க்கு ஆதரவும் எதிர்ப்பும் வருவது சகஜம் தான். இந்த அணையால் ஒரு சமூகம் (பழங்குடிகள்) பாதிக்கப் பட்டாலும் அதனால் மூன்று மாவட்டங்கள் விவசாயத்திலும், மின்சார   உற்பத்தியிலும் பயன் பெறுவதால் இதை மோசமான திட்டம் என்று சொல்லிவிட முடியாது. அதே நேரத்தில் பாதிக்கப் பட்டோரின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்தே தீரவேண்டும். இந்தியாவைப் போன்றொரு நாட்டில் பிறந்து விட்டால்  'வேற்றுமையில் ஒற்றுமையை ' வெறும் வாய் வார்த்தைகளிலும், எழுத்துக்களாவும்  மட்டுமே பார்க்க முடியும். எந்த ஒரு பிரச்சனைக்குரிய திட்டமானாலும் அதை அரசியல் வியாபாரத்திற்கு அப்பார்ப்பட்டு போது மக்களுக்கு நலம் தரும் திட்டமாகத் தோன்றிவிட்டால் நாம் கண்டிப்பாக ஆதரவளித்தே தீரவேண்டும்.  

இந்தியாவின் சாபக்கேடு!!!

· 1 கருத்துகள்

"I would go to the length of giving the whole congress a decent burial, rather than put up with the corruption that is rampant." --- Mahatma Gandhi May 1939

அறுபது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை எழுபதாண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டார்.

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாய் கேள்விப் பற்றிருப்போம். ஆனால் இவர்கள் (காங்கிரசார்) ஒரு பூசணிக்காயை மற்றொரு பெரிய பூசணிக்காயைக் கொண்டு மறைக்கிறார்கள்! ஒரு ஊழலைப் பற்றி பேசுவதற்குள் மற்றொரு ஊழல்! அதற்குள் இன்னொரு  ஊழல்! 
ஊழல் செய்தால் பதவியைப் பிடிங்கிவிடுகிறார்கள்! ஊழல் செய்த பணத்தை????  

நட்வர் சிங் ஐ ஞாபகம் இருக்கிறதா? அவர் பதவியைப் பறித்து ஆறாண்டுகள் ஆகிவிட்டது. அவர் ஊழல் செய்த பணம்??? ம்ம்ம்ம்..... 

நாம் கல்மாடியை மட்டுமல்ல, எல்லா களவாணிகளையும் மறந்துவிடுவோம்!


இதோ இவர்கள் பொற்கால ஆட்சி:


உணவுக்கு எண்ணெய் திட்ட ஊழல் 
ஈராக்குடனான இத்திட்டத்தில்  நட்வர்சிங் மற்றும் அவரது மகனால் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி இருவரும் கட்சியிலிருந்து நீக்கப் பட்டனர் 


மது கோடா கறுப்புப் பண விவகாரம் 
4000 கோடி அளவிலான பணத்தை வெளுக்க முயன்றதாக குற்றச்சாட்டு 


2G ஸ்பெக்ட்ரம் ஊழல் 
போதும் என்ற அளவில் தகவல்கள் எல்லாருக்கும் தெரியும் 

காமன் வெல்த் முறைகேடு 
வெளிநாட்டினரிடமும் மானம் போக 15000 கோடிக்கு இதில் ஊழல் 

ஆதர்ஷ் அடுக்குமாடி கட்டிட மோசடி 
குடியிருப்புகளை முதல்வர் மற்றும் குடும்பத்தார் கையகப் படுத்தியதாக குற்றச்சாட்டு 

IPL ஊழல் 
சசி தரூர், லலித் மோடி மற்றும் புனே குதிரப்பண்ணையாளர் மோசடியில் ஈடுபட்டதாக குற்றசாட்டு 

நிலக்கரி ஊழல் 
முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் இதிலும் Rs 85000 கோடி மோசடி நடை பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு 

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டுக்கு பண விவகாரம், 
இடையிடையே குண்டுவெடிப்புகள் இதற்கிடையில் நக்சலைட் பிரச்சனையிலிருந்து தற்காலிக எஸ்கேப்!!! 

பெயர் சொல்லும் படியாக இவர்கள் இன்னும் எந்த ஒரு மசோதாவையும் நிறைவேற்றவில்லை. மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை 7 கால ஆண்டு ஆட்சியில் இன்னமும் நிறைவேற்றவில்லை. (இதில் லோக் பால் மசோதாவை நிறைவேற்ற இன்னும் எத்தனை ஆண்டு ஆகுமோ?) 

இவர்கள் பொருளாதார மாமேதைகள் என்றால் அதுவும் இல்லை. பணவீக்கத்தை காற்றில் பறக்க விட்டுவிட்டார்கள். இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தால் இல் மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெறுவோம் என்றார்கள்! அதைதான் பார்த்தோமே!!!!

பெட்ரோல் டீசல் விலை மாதமொருமுறை உயர்கிறது.

இதில் இலங்கை சீனா வசம் சாய்ந்துவிடும் என்று பயம்,
பாகிஸ்தானோடு போர் மூண்டால் பொருளாதாரம் சீரழியும் என்று பயம், 
பயங்கரவாததிற்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் சிறுபான்மையினர் ஒட்டு போய்விடுமென பயம் ,
மம்தாவிடம் பயம்,
நக்சலைட்டுகளிடம் பயம்.!
இன்னும் எதற்ககெல்லாம் பயந்து கொண்டு எந்த நடவடிக்கையுமே  எடுக்காமல் இருக்கப் போகிறீர்களோ?

எது எப்படியானாலும் பொருளாதாரத்தில் நாம் முன்னேறிக் கொண்டுதான் இருப்போம் என்பது எல்லாருக்கும் தெரியும்! அதை காங்கிரஸ் வகையறாக்கள் நன்கு புரிந்து கொண்டு இஷ்டப்படி ஆள்கிறார்கள்!  

கடைசியில் இந்தியாவை நாங்கள் தான் வல்லரசாக்கினோம் என்று சொல்லாமலிருந்தால் சரி!
இப்போதே நிறுத்திவிடுங்களேன் ப்ளீஸ்....!

· 0 கருத்துகள்

ஆட்சி மாற்றம் வந்தாச்சு. சுறு சுறுப்பா எல்லா வேலையும் நடக்க ஆரம்பிச்சாச்சு. இனி என்ன?
அடுத்து கொஞ்ச நாள்ல அப்டி இப்டின்னு ஒரு ரெண்டு மூணு என்கவுண்டர் அப்பறம் நாலு பேத்த அரெஸ்ட் பண்ணி உள்ள வச்சதும் நாம எப்பவும் போல நியூச (news) பாத்துட்டு நம்ம வேலைய பாக்க போயிருவோம்.

அட குடிகார மக்களே! 

இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் இந்த இரண்டு கட்சியையும் நம்பி நாம ஏமாறப் போறோம் நு தெரியல! 

அது எப்படின்னே தெரில!
ஒரு பத்து ரூபாய நம்ம பாக்கெட் ல இருந்து எடுத்து இன்னொருத்தனுக்கு குடுக்க வலிக்கும்! ஆனா தினமும் நம்ம காசுல இருந்து 100 ரூபா திருடர ஒருத்தனுக்கு ஓட்டு போடறீங்க! 

நம்மல பத்தி நல்ல தெரிஞ்சதால தான் போன முறை இலவசம் கொடுத்தே ஒருத்தர் ஆட்சிக்கு வந்தார்! இப்போ கோடநாட்டுல உட்காந்துடே அந்த அம்மாவும் ஆட்சிய புடிச்சுடாங்க! 

அஞ்சு வருசத்துக்கு ஒருதரம் ஆட்சி மாற்றம் வந்தா மட்டும் தமிழ் நாடு முன்னேறிடுமா என்ன? 


ஒரு மொபைல் போன் வாங்க நாலு நாள் யோசிக்கற நாம, ஒரு முறையாது ஒரு நல்ல government வரதுக்கு யோசிக்கிறோமா? 

அம்மா வந்ததும் எல்லாமே மாறிடும்னு சொன்னாங்க! என்ன மாறிச்சு? 

சட்டமன்றம் பழைய இடத்துக்கே மாறுச்சு,

IAS, IPS, கமிஷனர் இவங்களோட இடமும் பதவியும் மாறுச்சு,
(இது வளர்ச்சித் திட்டங்களுக்கு அவசியம் என்றாலும் இதில் அரசியல் காழ்ப்புனற்சிகளே அதிகம்!)

இப்போ படிக்கற பாட புத்தகம் மாற போகுது!

இதற்க்கு முழு காரணமும் இப்போதைய ஆட்சியாளர்கள் மட்டும் இல்லை என்றாலும், எது எப்படியானாலும் இந்தமற்றங்களினால்  நமக்கெந்த இலாபமும் இல்லை என்பதே உண்மை!  

சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் கலைஞரின் கவிதையும், தி.மு.க வின் சின்னமும் இருக்கிறதாம். இதனால் பாட புத்தகத்திற்கு இபோதைக்கு தற்காலிக தடையாம்! 

கலைஞர் காப்பிட்டுத் திட்டத்திற்கு பதில் புதிதாக வேறொரு காப்பீட்டுத் திட்டமாம்! 

இலவச வண்ணத்தொலைக்காட்சி திட்டம் நிறுத்திவைப்பு! ஏன் அதுல tv on பண்ணதும் கலைஞர் படம் வருதே அதுக்காகத்தான்! 

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்ததால மகாத்மா படம் ரூபாய் நோட்டுல வருதே! இவரு  எந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித்தந்தார்னு (ஒரு வேளை இலங்கையா இருக்குமோ!) அவர் படம் tv ல வருதுன்னு தெரியவில்லை!

இதுக்கெல்லாம் அய்யா செஞ்ச குற்றமா, அம்மா செஞ்ச குற்றமா நு பேசி பிரயோஜனமே இல்லை! 

எல்லாம் நாம் செய்த குற்றம் தான்! 

என்ன ஒரு 5000 கோடி இந்த ஆட்சி மாற்றத்தால வேஸ்ட் ஆகியிருக்குமா?

அய்யாக்களே, அம்மாக்களே! 

நீங்கள் கொள்ளையடித்தால் கூட எங்களுக்கு கவலையில்லை! எங்கள் பணத்தை குப்பைத்தொட்டிக்கு செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!

நீங்கள் எந்தத் திட்டம் கொண்டுவந்தாலும் அது அடுத்த ஆட்சியில் காணாமல் தான் போகப்போகிறது! 

நிர்வாகத்தை மட்டும் பாருங்களேன்! புதுத் திட்டம் எதுவுமே வேண்டாமே! 

இப்போது நீங்கள் ஆரம்பிக்கும் மோனோ இரயில் திட்டம் நிறைவேற இன்னும் 5 ஆண்டுகள் ஆகும்! அதற்க்கு அடுத்து எப்படியும் இத்திட்டம் கிடப்பில் தான் போடப்படும்!

அதற்கு இப்போதே நிறுத்திவிடுங்களேன் ப்ளீஸ்....!Related Posts Plugin for WordPress, Blogger...
 

Copyright © 2011 Mixx Blogger Template - Blogger Templates by BloggerReflex

Sponsored by: Trucks | SUV | Cheap Concert Tickets